ஹெல்மெட் அணியாத மாணவர்களை கல்லுாரிக்குள் அனுமதிக்க வேண்டாம் போலீசார் அறிவுறுத்தல்
சோழிங்கநல்லுார், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பிரதான சாலைகளின் அகலம் அதிகம். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன.
இதில், அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பல கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.
இதனால், அதிக விபத்துகள் நடக்கும் புறநகர் பகுதியில், போலீசார் தீவிர சோதனை நடத்தி, ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
சென்னை மாநகர் பகுதியில் வாகனங்களை குறைவான வேகத்தில் இயக்குவதால், பெரும்பாலான விபத்துகளில் வாகனங்கள் சேதமடைகின்றன. உயிரிழப்புகள் குறைவு.
புறநகர் பகுதியில் உயிரிழப்புகள் அதிகம். ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும் செல்லும் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்களால், பிறர் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இதனால், விபத்து அதிகமாக நடக்கும், ஓ.எம்.ஆர்., – இ.சி.ஆர்., வேளச்சேரி – தாம்பரம், கேளம்பாக்கம் – வண்டலுார் போன்ற விரைவு சாலைகளில், வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம்.
அபராதம் விதிப்பதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். கல்லுாரி, ஐ.டி., நிறுவனங்களிடம், தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை அனுமதிக்க வேண்டாம் என, வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.