ஏழு கிராமங்கள் வழியாக அமைக்க நிலம் எடுக்க திட்டம் : குத்தம்பாக்கம் நிலையத்தில் பஸ்கள் வெளியேற புது சாலை இரட்டை பாதை!

சென்னை :திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில், 395 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு மாற்று சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஏழு கிராமங்கள் வழியாக புதிய சாலை அமைக்க நிலம்எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், அதற்கு தீர்வு காணும் வகையில், வெளியூர் பேருந்துகளுக்கான புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதன்படி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, மாதவரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் உருவானது. இவை செயல்பாட்டுக்கும் வந்துள்ளன.

மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, திருமழிசை குத்தம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து செல்லும் வகையில், 395 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

குத்தம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய வகையில், இங்கு துணை நகரம் அமைக்க, வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டது. இதற்காக, சென்னை – பெங்களூரு சாலையில் இருந்து குத்தம்பாக்கம் வரை செல்வதற்காக, 300 அடி அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலை தொடர்ந்து செல்லாமல், பாதியில் முடியும் வகையில் உள்ளது. இந்த குறிப்பிட்ட சாலை முடியும் இடத்தில்தான், தற்போது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை – பெங்களூரு சாலையில் இருந்து, பேருந்து நிலைய பகுதிக்கு செல்லவும், வெளியேறவும் ஒரே சாலைதான் உள்ளது. பொதுவாக, பேருந்து நிலையங்களில் வெளியூர் செல்லும் அரசு, ஆம்னி பேருந்துகள் உள்ளே வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும்.

இத்துடன், மாநகர பேருந்துகள் வந்து செல்வதற்கும், தனியார் வாகனங்கள் வந்து செல்வதற்கும் தனித்தனி நுழைவாயில்கள், பாதை வசதிகள் இருக்க வேண்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டும்போதும், இது போன்ற பிரச்னை எழுந்தது. இதனால், வெளியூர் பேருந்துகள் வெளியேறி செல்வதற்காக பின்புறம் புதிய சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், குத்தம்பாக்கத்தில், அனைத்து வகை வாகனங்களும், சென்னை – பெங்களூரு சாலையை அடைய, ஒரே பாதை மட்டுமே இருப்பதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதே இதற்கான தீர்வை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

கிளாம்பாக்கத்தை போல் எந்த பிரச்னையும் குத்தம்பாக்கத்தில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக செயல்படுகிறோம். குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை, எளிதில் அணுகுவதற்கான பாதை வசதிகளை அமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். குறிப்பாக, திருமழிசை புது நகர் திட்டத்தின் கீழ், இங்கு வெளிவட்ட சாலை – சென்னை பெங்களூரு சாலையை இணைக்கும் வகையில், புதிய லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு, கோலப்பஞ்சேரி, துக்கானம்பட்டு, உடையவர் கோவில், வரதராஜபுரம், காவல்சேரி, திருமழிசை, கீழ்மணம்பேடு, நெஞ்சேரி, குத்தம்பாக்கம், வெள்ளவேடு, நரசிங்கபுரம், பர்வதராஜபுரம், பழங்சூர் கிராமங்களில், 1,605 ஏக்கர் நிலத்தை, நில தொகுப்பு முறையில் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நிலத்தை பயன்படுத்தி, 100 அடி அகலத்தில் லுாப் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் போக்குவரத்து வசதி, உள்கட்டமைப்பு மேம்படும். இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *