கன்டோன்மென்ட் போர்டு பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: லாரிகள் சிறைபிடிப்பு
ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலம், 166வது வார்டுக்கு உட்பட்ட நேரு நெடுஞ்சாலையில் பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான 15 ஏக்கர் காலிமனை உள்ளது. இதில் பரங்கிமலை பகுதியில் சேரும் குப்பையை கொட்டி வந்தனர். மேலும் நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் சேரும் குப்பையை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டிவந்தனர். இந்நிலையில், பரங்கிமலை பகுதியில் சேரும் குப்பையை பழவந்தாங்கலில் கொண்டுவந்து கொட்டுவதால் சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக, கடந்த 2021ம் ஆண்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, இந்த பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்திற்கு சொந்தான காலிமனையில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. தகவலறிந்த பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர் பகுதி நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து, மேற்கண்ட பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.