ஏரியை ஆக்கிரமித்து கட்டியதாக 600 வீடுகளுக்கு ‘நோட்டீஸ்’
நெமிலிச்சேரி, ஆவடி அடுத்த நெமிலிச்சேரி ஊராட்சியில், தைலம்பட்டு ஏரி உள்ளது. ஏரி, 54.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது, 10 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கியுள்ளது. அங்குள்ள, நாகாத்தம்மன் நகர், அண்ணா நகர், அம்பேத்கர் நகரில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்நிலையில், ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி, ஆவடி தாசில்தார், வருவாய்த் துறையினர் மற்றும் அதிகாரிகள், நேற்று காலை முதல், 600 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, 200க்கும் மேற்பட்ட போலீசார், அங்கு குவிக்கப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளுக்கும்மேலாக, இங்கு வசித்து வருகிறோம். மத்திய அரசின் திட்டங்களான ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் நியாய விலை கடை, நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை உள்ளன.
இப்பகுதி ஆக்கிரமிப்பு இல்லை என்பதற்கு, இத்திட்டங்களே சாட்சி. தைலம்பட்டு ஏரி, பொதுபணித்துறைக்கு சொந்தமானது இல்லை. ஊராட்சிக்கு சொந்தமானது.
நாகாத்தம்மன் நகர், அண்ணா நகர் மற்றும் அம்பேத்கர் நகரில் வசிப்போருக்கு பட்டா வழங்க, 30 ஆண்டுகளாக, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்