முதியவரிடம் நுாதனமாக நகை பறித்தவர் கைது

சென்னை, சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர் கோபால், 75. இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.கடந்த 13ம் தேதி வடபழனி முருகன் கோவில் அருகே, டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது,ரியல் எஸ்டேட் தரகர் என்ற பெயரில், கோடம்பாக்கம் முருகன் என்பவர் அறிமுகமானார்.

‘தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் தனக்கு நன்கு அறிமுகமானவர் எனவும், சென்னை புறநகர் பகுதிகளில் 100 ஏக்கர் நிலம் வாங்க போகிறார்’ எனவும் கூறியுள்ளார்.

மேலும், ‘உங்களுக்கு தெரிந்த இடமிருந்தால் சொல்லுங்கள், ‘நல்லகமிஷன்’ வாங்கி தருகிறேன்’ என, நம்பும்படி பேசிஉள்ளார்.

மறுநாள், ‘நகைக்கடை உரிமையாளரை சந்தித்து இடம் தொடர்பாக பேசுவோம்’ என, தி.நகர், உஸ்மான் சாலைக்கு கோபாலை அழைத்துச் சென்றார்.

நகைக்கடை வாசல் அருகே சென்றபோது, தான் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களையும் கழற்றி, முதியவர் கோபாலிடம் முருகன் கொடுத்துள்ளார்.

‘நம்மை வாழ வைக்கும்முதலாளியை பார்க்க செல்லும்போது, ஆடம்பரமாக செல்லக்கூடாது; இவற்றை வைத்திருங்கள்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ‘உங்கள் கையில் ஏன் அழுக்கு படிந்த மோதிரத்தை அணிந்துள்ளீர்கள்; அதை கொடுங்கள்; உள்ளே சென்று பாலீஷ் போட்டு எடுத்து வருகிறேன்’ எனக் கூறி 5 கிராம் மோதிரத்தை வாங்கி சென்றார்.

நீண்ட நேரமாகியும்முருகன் வராததால் சந்தே கம் அடைந்த முதியவர்கோபால், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்தவர், கோபால் தன்னிடம் வழங்கப்பட்ட மோதிரங்களை அருகில் உள்ள நகைக்கடையில் கொண்டு காட்டிய போது, அவை ‘கவரிங்’ என தெரியவந்தது.

இது தொடர்பாக, மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்தபோலீசார், நுாதன முறையில் மோதிரத்தை ‘ஆட்டை’ போட்ட, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 50, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

இவர் மீது விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் சென்னை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில், வழக்கு உள்ளது தெரியவந்தது.

கைதான முருகன் ஐந்து பெண்களுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும், முதியவர்களை குறிவைத்து இதேபோல் மோசடியில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *