8 மணி நேரத்தில் 5 செ.மீ., மழை நெரிசலில் வாகனங்கள் தத்தளிப்பு
சென்னை, வங்கக்கடலில்உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வந்த நிலையில், சென்னையில் நேற்று, 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதற்கான, ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்புக்கு மாறாக நேற்று காலையில், மழைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால், காலை 10:30 மணிக்கு பின், மெல்லிய துாறலாக துவங்கி,பிற்பகலில் நகர் முழுதும்பரவலாக மழைபெய்தது.
இடைவெளி இன்றி, சில மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால், வெளியில் செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர். பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகபட்சமாக, ராயபுரத்தில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
எண்ணுார், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகரில் ௪ செ.மீ., மழையும், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஐஸ்ஹவுஸ், அடையார், பெருங்குடியில் ௩ செ.மீ., மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்வதால், சென்னைக்கு இன்று கனமழை இருக்காது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், மூன்று நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு, மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.