ஓராண்டாக சாலையில் கழிவுநீர் பட்டாபிராமில் பெண்கள் மறியல்
பட்டாபிராம், ஆவடி மாநகராட்சி 20வது வார்டு, பட்டாபிராம், கந்தசாமி முதல் தெரு மற்றும் 2வது தெருக்களில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தெருவருகே, பள்ளத்து கோவில் அருகில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது.
பாதாளச் சாக்கடை இயந்திர நுழைவாயில் வழியாக, கந்தசாமி பிரதான சாலையில் 200 மீட்டர் துாரத்திற்கு, கடந்த ஓராண்டாக கழிவு நீர் வழிந்தோடுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் 25க்கும் மேற்பட்டோர், பட்டாபிராம் — பூந்தமல்லி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, 30 நிமிடங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஓடி வந்த அதிகாரிகள்
தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு பல நாட்களாக தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு உடனடியாக அகற்றினர். மழைக்கு பின், பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்து தருவதாக அவர்கள் உறுதியளித்தனர்