கொடுங்கையூர் எரி உலை திட்டம் கை விடக் கோரி கமிஷனரிடம் மனு
சென்னை,கொடுங்கையூரில் நிறுவப்பட உள்ள, குப்பை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிவுலை திட்டத்தை கைவிடக்கோரி, எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பினர், மாநகராட்சி கமிஷனரிடம் நேற்று மனு அளித்தனர்.
பின், கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஜியே டாமின், விஸ்வஜா உள்ளிட்டோர் அளித்த பேட்டி:
சென்னை மாநகராட்சி ஒவ்வொரு நாளும், 21 லட்சம் கிலோ திடக்கழிவை எரித்து, மின்சாரம் உருவாக்க, குப்பை எரி உலையை, வடசென்னையில் நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த எரிவுலைகள், மிகவும் அபாயகரமான சாம்பல் கழிவு, நச்சு வாயுக்களையும் உருவாக்கும்.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாச பிரச்னை, ஆஸ்துமா, தலைவலி, தோல் பிரச்னை, புற்றுநோய், கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னையை, ‘கார்பன் நியூட்ரல்’ ஆக மாற்றும் முயற்சிக்கு, இத்திட்டம் எந்த வகையிலும் உதவாது. எனவே, இத்திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.