வயலினில் கன்யாகுமரி அட்டகாசம் மனம் குளிர்ந்தது; சபா அதிர்ந்தது
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளே என்பதற்கேற்ப, மார்கழி முதல் நாளில் மயிலாப்பூர் பார்த்தசாரதி சுவாமி சபாவில் நிகழ்ந்தது, பிரபல வயலின் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ டாக்டர் கன்யாகுமரி கச்சேரி.
முதலாவதாக, மூலாதார மூர்த்தியை போற்றி, பாபநாசம் சிவன் இயற்றிய திலங் ராகத்தில் ‘ஸ்ரீ கணேசா சரணம்’ என்ற பாடலை இசைத்தார்.
இங்கு, சரணத்தில் ஆதி தேவன் என்ற இடத்தில் நின்று இசைத்தது அபாரம். மேலும் இதன் முதல் வரிகளுக்கே கற்பனை ஸ்வரம் இசைத்து, இனிதே நிறைவு செய்தார். இங்கு ‘டிரெமெலோ’ முறையில் இசைத்தது, அனைவரையும் அசைய வைத்தார்.
பின், ஆண்டாள் அருளிய மார்கழி திங்கள் எனும் திருப்பாவையை வாசித்தார். சாரமதி ராகத்தை இசைத்து, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.
தொடர்ந்து, தியாகராஜர் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த ‘மோக்ஷமு கலதா’ எனும் கீர்த்தனையை இசைத்தார். கற்பனை ஸ்வரம் வாசித்த பகுதியில், மிருதங்கமும், வயலினும், நயத்திற்கேற்ப இரண்டற கலந்தது சுவாரசியப்படுத்தியது.
பின், பௌளி ராகத்தை சிறிது நேரம் ஆலாபனை செய்து, அன்னமாச்சாரியார் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த ‘ஸ்ரீமன் நாராயண’ கீர்த்தனையை தொடர்ந்தார்.
அடுத்தபடியாக, சிவரஞ்சனி ராகத்தில் ஒரு பாடலை இசைத்தார். இதில் விசேஷமாக சஹானா, காபி போன்ற ராகத்தை பயன்படுத்தி குதுாகலப்படுத்தினார். இந்த ராகமாலிகையில், லய வாத்தியங்கள் இசைவு கச்சிதமாக இருந்தது.
இதையடுத்து துவங்கியது, தனி ஆவர்த்தனத்தின் சங்கமம். மிருதங்கம் அனந்த ஆர்.கிருஷ்ணன், கடம் வித்வான் சுரேஷ் வைத்தியநாதன் ஆகியோர், சில சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டு, இருவரும் ஆட்டுவித்தனர்.
ரசிகர்களின் மனமும், கைகளும் ஒருசேர தாளமிட்டு, லயங்களை ரசித்து கொண்டு, சபாவை ஆரவாரப்படுத்திக் கொண்டிருந்தன.
அழகான மோராவைக் கொண்டும், சிறப்பான ஒரு கோர்வையை கொண்டும் அருமையாக நிறைவு செய்தனர்.
பின், கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய ஆதிதாளத்தில் அமைந்த ‘எப்போ வருவாரோ’ என்ற பாடலை இனிமைப்படுத்தினார். கிருஷ்ணரின் லீலைகளை வெளிப்படுத்தும் ‘முத்து காரே யசோதா’ என்ற அன்னமாச்சார்யா இயற்றிய பாடலை, வயலினில் கொஞ்சினார். இந்த இடத்தில் அவரது பேரன் சிவதேஜா வயலின் வாசித்த
விதம் அருமை.
அடுத்தபடியாக, கருடத்வனி ராகத்தில் அன்னமாச்சார்யா வரிகளில், இவர் இசை அமைத்ததை அரங்கேற்றினார். திஸ்ர நடையில் கீர்த்தனை அமைத்த விதம் வித்தியாசம் பெற்றது.
சங்கீத உலகில், தன் தனித்துவ வாசிப்பால் ரசிகர்களை, தம் பக்கம் எப்படி இழுக்கிறார் என்பதை உணர்த்துவதாக நிறைவாக, பவமான எனும் மங்களம் இசைத்தபோது மனம் குளிர்ந்தது. அதற்கு இசைவாக, சபாவில் அதிர்ந்த கரவொலி உணர்த்தியது.
– சத்திரமனை ந.சரண்குமார்