ரவீஸ்வரர் கோவில் கட்டுமானத்துடன் மூலவர் சன்னிதியு ம் உயர்த்தி அமைப்பு
வியாசர்பாடி, வியாசர்பாடியில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவிலில், சூரிய கதிர்கள் ராஜகோபுரம் வழியாக மூலவர் சிவலிங்கத்தின் மேல் விழும்படியாக அமைப்பு இருந்தது.
ஆனால், சில ஆண்டுகளாக இந்நிகழ்வுகள் நடக்கவில்லை. தொல்லியல் துறையின் ஆய்வில் கோவில் தரைதளத்தில் இருந்து, 5 அடி ஆழத்திற்கு இறங்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி, மீண்டும் திருக்கோவிலுக்குள் சூரிய கதிர்படும் வகையில் ‘ஜாக்கி’ தொழில்நுட்பத்தால் கோவிலை உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, உபயதாரர் நிதி 1.44 கோடி ரூபாயும், திருக்கோவில் நிதியாக 70 லட்சம் ரூபாயும் என, மொத்தம் 2.14 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கோவில் கட்டுமானத்தை உயர்த்தி அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த மம்சந்த் சுரேந்திரகுமார், 33, கூறியதாவது:
கடந்த 35 ஆண்டுகளாக, நாட்டில் ஹரியானா, ராஜஸ்தான், உத்திரகண்ட், ஹிமாச்சல், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், 100க்கும் மேற்பட்ட கோவில்களை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
சென்னையில், ஆலந்துாரில் சிவசுப்ரமணி கோவிலை 5 அடியும்; கிண்டியில் வீர ஆஞ்சநேயர் கோவிலை, 6 அடியும் உயர்த்தி உள்ளோம்.
தற்போது வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலை 8 அடி உயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 500 ஜாக்கிகள் மூலம், 25க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பணி நடக்கிறது. 1 அடி, இரண்டு நாள்களில் உயர்த்தப்படுகிறது. ஒரே நேரத்தில், சிவன் சன்னதியும், அம்மன் சன்னிதியும் உயர்த்தும் பணிகள் நடக்கின்றன.
வரலாற்றில் முதல்முறையாக, சிவன் சன்னதியில் மட்டும் மூலவர் சிலையுடன் சேர்த்து, கோவிலை உயர்த்தும் பணி நடக்கிறது. கோவில் உயர்த்தும் பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரம்பரிய முறை
இது குறித்து பூவலிங்கம் பேரருள் சிற்ப கலை கூடத்தின் ஸ்தபதி அரிகிருஷ்ணன், 46, கூறியதாவது:
வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் ‘ஜாக்கி’ மூலம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், அங்கு பழமை வாய்ந்த கட்டுமான பணிகளில், சுதை கலவை முறை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.
இதில், சுண்ணாம்பு, மணல், கருக்காய், வெல்லம் உள்ளிட்டவற்றை சரிசம அளவில் சேர்த்து, கற்களுக்கு நடுவில் பூசப்படுகிறது. இந்த கலவை இறுக்கி இரும்பு போலாகி விடும். கட்டுமானம் ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.