வண்ணை சந்தை வியாபாரிகள் மறியல் 3 மாதமாக மின் இணைப்பு துண்டிப்பு
வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை 48வது வார்டுக்கு உட்பட்ட, பார்த்தசாரதி நகரில், சென்னை மாநகராட்சியின் சந்தை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், இறைச்சி, காய்கறி, பழக்கடை, மீன் கடைகள், பலசரக்கு கடைகள் என, 16 கடைகள் இயங்கி வந்தன.
இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் சந்தை வளாகத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள அங்கன்வாடியில் இருந்து சந்தை வளாகத்திற்கு மின் சப்ளை செய்யப்படுவதாக கூறி, மின் இணைப்பை துண்டித்து சென்றனர்.
மின்சாரம் இல்லாததால், வியாபாரிகள் கடைகளை திறக்காமல் மூடினர்.
இந்த நிலையில், 70க்கும் மேற்பட்ட பெண்கள் மின் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து, வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில், நேற்று கண்டன கோஷங்களை எழுப்பியபடி மறியலில் ஈடுபட்டனர்.
வண்ணாரப்பேட்டை போலீசார், மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு நடத்தினர். விரைந்து புதிய மின் இணைப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
‘கப்பம்’ வாங்கியது யார்?
இது குறித்து, பார்த்தசாரதி நகர் சிறு கடை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சிராஜுதீன், 40, கூறியதாவது:
மாநகராட்சி சந்தை வளாகத்தை, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., முன்னாள் பெண் கவுன்சிலர் பூங்கொடியின் தம்பி கந்தா என்பவர், ஒப்பந்த வாடகைக்கு எடுத்து, அதை கடைக்காரர்களுக்கு மேல் வாடகைக்கு விட்டார். வியாபாரிகளிடம், மாதம் 3,600 ரூபாய் என, 57,600 ரூபாய் வசூலித்து வந்தார்.
அவர் 2020ம் ஆண்டு, ‘கொரோனா’ நோய் தொற்றால் இறந்து விடவே, கவுன்சிலர் பூங்கொடியின் மகன் ராஜேஷ் வாடகை வசூலித்தார்.
இந்த நிலையில், கடந்த 2020 டிசம்பரில், வாடகை பாக்கி 7.50 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளதாக கூறி, மாநகராட்சியினர் சந்தை வளாகத்திற்கு ‘நோட்டீஸ்’ ஒட்டி சீல் வைத்தனர்.
பின், பலகட்ட பேச்சுக்கு பின், வியாபாரிகள் சேர்ந்து, 3 லட்ச ரூபாய் கொடுத்த பின், கடைகளை தொடர்ந்து நடத்தவும், வாடகையை நேரடியாக மாநகராட்சியில் வாடகை கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்று கொள்ள கூறினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநகராட்சியில் வாடகை கட்டணத்தை சரியாக கட்டி வருகிறோம். இந்நிலையில், திடீரென மின் இணைப்பு இல்லையென கூறி, எந்தவித அறிவிப்பும் இன்றி மின் வாரிய அதிகாரிகள் இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.