துாக்கத்தை கலைத்ததால் போலீசுக்கு குத்து விட்ட நபர்
ஆவடி, திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலை, சரஸ்வதி நகர் அருகே, நேற்று காலை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ‘மாருதி ஸ்விப்ட்’ கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
காரில் மூன்று நபர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆவடி போக்குவரத்து காவலர் செல்லப்பாண்டி, 40, காரை சோதனையிட்டார். இருவரையும் எழுப்பி காரை எடுக்கும்படி கூறினார்.
அப்போது, கார் ஓட்டுனரும் அருகில் இருந்த நபரும், செல்லப்பாண்டியை கார் உள்ளே இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், செல்லப்பாண்டிக்கு, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் திரண்டு, போலீசை தாக்கியோருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதில், ஒருவர் ஓடிவிட மற்றொருவரை காருக்குள் சிறைபிடித்தனர்.
விசாரனையில், செல்லப்பாண்டியை தாக்கியது, விக்கிரவாண்டியை சேர்ந்த பசுபதி, 27, என்பதும், அதீத மது போதையில் இருப்பதும் தெரிந்தது.
போலீசார், பசுபதி மற்றும் காரின் பின் இருக்கையில் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நபரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர். தப்பியோடிய கடலுாரைச் சேர்ந்த அருண்குமார், 24, என்பவரை தேடுகின்றனர்.