ஆடி கிருத்திகை திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. முக்கிய விழாவான ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள நல்லாங்குளம், சரவணப்பொய்கை, திருக்குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு படிகள் வழியாக பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடிகளுடனும், அலகு குத்தியும் மலைக்கோவிலில் முருக பெருமானை வழிபட்டனர்.

விழாவையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று காலை திருத்தணி முருகன் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. இதை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் கோவில் அதிகாரிகள் சீர் வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். சீர்வரிசைகளை திருத்தணி முருகன் மலைக்கோவில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

மேலும் ஆடிக்கிருத்திகை முக்கிய நிகழ்வாக மாலையில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில், மலைக்கோவில் காவடி மண்டபத்தில் இருந்து உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதராக தேர் வீதியில் வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா பாதுகாப்புக்காக திருத்தணி நகர் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயபிரியா, கோவில் துணை ஆணையர் விஜயா ஆகியோர் செய்திருத்தனர்.

சென்னை, வடபழனி முருகன் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், மயில், மலர் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதுதவிர பாரிமுனை முத்துகுமாரசாமி கோவில் (கந்தகோட்டம்), குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சாமி கோவில், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில், பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், குமரன் குன்றம், மடிப்பாக்கம் முருகன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *