மேடவாக்கத்தில் மக்கள் அதிருப்தி புறக்கணிக்கப்படும் 10வது வார்டு
மேடவாக்கம், பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம், மாநகராட்சியோடு இணைக்கப்படாமல், தொடர்ந்து ஊராட்சியாகவே நீடிக்கிறது. இங்கு, 12 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த சிவபூஷணம் ஊராட்சி தலைவியாக உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், ஊராட்சி முழுதும், 10 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டும், 10வது வார்டில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை என, அப்பகுதிவாசிகள் புகார் எழுப்பியுள்ளனர்.
அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மேடவாக்கம் ஊராட்சி, 10வது வார்டில், 7000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள அன்னபூரணி தெருவில், கடந்த 40 ஆண்டுகளாக சாலை அமைக்கப்பட வில்லை. இது பற்றி ஊராட்சி தலைவர் கண்டுகொள்ளவில்லை.
முதலமைச்சரின் தனிப் பிரிவில் புகார் அளித்தபின், ஊராட்சி நிதியிலிருந்து சாலை அமைக்கும்படி துறை அதிகாரிகள் பலமுறை உத்தரவிட்டும், ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது.
இதுபோல், 10வது வார்டுக்கு உட்பட்ட முனுசாமி நகரிலும், கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம், ஊராட்சி முழுதும் சாலை, வடிகால் அமைக்க, சி.எம்.டி.ஏ., நிதி வாயிலாக, 4.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. இதில், 10வது வார்டில், ஒரு தெருகூட இடம்பெறவில்லை.
மேலும், மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சேதமான சாலைகளை புனரமைக்க, சி.எம்.டி.ஏ., நிதியிலிருந்து 1.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்தன. இதிலும், 10வது வார்டு புறக்கணிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, 10வது வார்டிலும் வளர்ச்சிப் பணிகளைமுன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.