பல்லாவரம், குரோம் பேட்டையில் குழாய் மாற்ற ரூ.86 கோடி ஒதுக்காததால் திணறல் கழிவுநீர் சூழ்ந்து… தத்தளிப்பு!
பல்லாவரம் ;பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டையில், முறையான பராமரிப்பு இல்லாததால், 12 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய் உடைந்து, எங்கு பார்த்தாலும் கழிவுநீர் பொங்கி சாலையில் ஓடுவதும், குடியிருப்புகளை சுற்றி தேங்குவதும் தொடர்கிறது. இதற்கு தீர்வு காண, 86 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி ஓராண்டுக்கு மேலாகியும், அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால், சீரமைக்க முடியாமல் தாம்பரம் மாநகராட்சி திணறி வருகிறது.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள பல்லாவரம், நகராட்சியாக இருந்தபோது, 2005ல், 75.33 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணி துவங்கி, 2012ல் முடிக்கப்பட்டது. அப்போது, 159.74 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் புதைக்கப்பட்டு, 27,243 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. ஐந்து இடங்களில், சிறிய உந்து நிலையங்களும், கீழக்கட்டளை ஏரி கரையை ஒட்டி, பம்பிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டன.
குரோம்பேட்டை, பல்லாவரம் தெருக்களுக்குள் சோனா பைப்பும், கிராவட்டி மற்றும் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக, பம்பிங் ஸ்டேஷனுக்கு ஆர்.சி.சி., பைப்பும் புதைக்கப்பட்டன.
அதன்பின், விடுபட்ட பகுதிகளில், 24.06 கோடி ரூபாய் செலவில், 41 கி.மீ., நீளத்திற்கு பணிகள் நடந்தன. அதில், கூடுதலாக, 13,800 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை, ரயில்வே லைனை கடந்து, புதுவை நகர் வழியாக ரேடியல் சாலை பிரதான குழாயில் கலந்து, கீழ்க்கட்டளை பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது.
அதுமட்டுமின்றி, 9 மற்றும் 13 – 21 வரையுள்ள வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அருள்முருகன் டவர் வழியாக, ரேடியல் சாலையில் கலந்து, பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது.
அதேபோல், 23 – 26, 35 – 38 ஆகிய வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நெமிலிச்சேரி வழியாக, கீழ்க்கட்டளைக்கு செல்கிறது.
பல்லாவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வந்து, 12 ஆண்டுகள் ஆன நிலையில், பராமரிப்பில் கவனம் செலுத்தாததால், பல இடங்களில் குழாய்கள் உடைந்து சேதமடைந்து விட்டன.
பல இடங்களில், குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன. சாலை விரிவாக்கப் பணியின்போது, ரேடியல் சாலை வழியாக செல்லும் பிரதான குழாயை, 30 இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் உடைத்துவிட்டனர்.
அதனால், ஜமீன்பல்லாவரம், பெருமாள், ஈஸ்வரி, திருத்தணி நகர்கள், கீழ்க்கட்டளை, மளகானந்தபுரம், பாரத், அம்பாள், கல்யாணி நகர்கள், வைத்தியலிங்கம் சாலை, நியூ காலனி, சேம்பர் காலனி, காமராஜர், புருஷோத்தம்மன், நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், குழாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையிலும், குடியிருப்புகளை சுற்றியும் தேங்குகிறது.
இந்த கழிவுநீர், கீழ்க்கட்டளை, பல்லாவரம் புத்தேரி, நெமிலிச்சேரி ஏரிகளில் நேரடியாக கலக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரச்னை நீடிப்பதால், பல இடங்களில் நிலத்தடி நீர் கெட்டு, ஆழ்துளை, கிணறு தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இது தொடர்பாக புகார் வரும் இடங்களில், மாநகராட்சி ஊழியர்கள் மேன்ஹோலை சுத்தம் செய்கின்றனர். ஆனாலும், பிரச்னை தீரவில்லை.
இந்த மழையில் பிரச்னை அதிகமாகி, திரும்பிய இடமெல்லாமல் மேன்ஹோல் நிரம்பி, சாலையில் கழிவுநீர் ஓடியது. பல பகுதிகளில் இன்னும் கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
விஸ்வரூபம் எடுக்கும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வாக, பழைய பாதாள சாக்கடை குழாய்களை அகற்றி, புதிதாக சிமென்ட் குழாய்களை பதிக்க, 2023ல், 86 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிதியை வழங்க அரசு முன்வரவில்லை. அதே நேரத்தில், இந்த நிதியை கடனாகக் கொடுக்க, தமிழக நகர்ப்புற நிதி சேவை நிறுவனம் முன்வந்தது. கடன் வாங்கினால் திருப்பி செலுத்த வேண்டும் என்பதால், மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டது. ஓராண்டாகியும் அரசிடம் இருந்து நிதி பெற முடியாத சூழல் நீடிக்கிறது.
அதனால், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகள், கழிவுநீரில் மிதக்கும் காலம் துாரத்தில் இல்லை. அதேநேரம், ஆலந்துார் தொகுதி கண்டோன்மென்ட் பகுதியில், குடிநீரில் கழிவுநீர் கலந்து, 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சம்பவம் போல், பல்லாவரம், குரோம்பேட்டையிலும் ஏற்படும்.
அதனால், மாநகராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, அரசிடம் இருந்து நிதியை பெற்று, பல்லாவரம், குரோம்பேட்டை மக்களின் துயரத்திற்கு விடிவு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2012ல் இருந்து பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. பிரதான குழாய்கள், ஆர்.சி.சி., பைப்பாக போடப்பட்டதால், காஸ் உற்பத்தியாகி, அரிப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறுகிறது. குழாய்கள் உடைவதும், அதை மாற்றுவதும் மட்டுமே நடக்கிறது; நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
அதனால், அரசிடம் நிதிபெற்று, பழைய பாதாள சாக்கடை குழாய்களை அகற்றி, புதிய குழாய்கள் பதிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
– சி.முருகையன், செயலர்,
குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம்,
தாம்பரம் மாநகராட்சி.
திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அரசின் நிதியை எதிர்பார்த்துள்ளோம். அதே நேரத்தில், தேவைப்படும் இடங்களில், மாநகராட்சி நிதியில் குழாயை மாற்றுதல், மேன்ஹோல் மாற்றுதல், மோட்டார் பொருத்துதல் போன்ற பணிகளை செய்து வருகிறோம். இதுவரை, மாநகராட்சி நிதி, 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் முழுதுமாக மாற்றப்படும்.
– ஞானவேல்,
செயற்பொறியாளர், தாம்பரம் மாநகராட்சி.