8 மீனவ கிராமங்களுக்கு வலைகளை உலர்த்த வசதியாக மண்டபம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் ஆட்சி காலத்தில் மீனவர்களுக்கு பல திட்டங்களான காப்பீடு திட்டம், மீனவர்களுக்கு உதவி தொகை, நலவாரியம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முதன்முறையாக மீனவர்களுக்கு மாநாடு, ராமநாதபுரத்தில் நடத்தி, அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கடல் அரிப்பை தடுப்பதற்கும், வலைகளை பாதுகாக்கவும், தூண்டில் வளைவு அமைக்கவும் மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவால், தூண்டில் வளைவு அமைக்க முடியாத நிலை உள்ளது. இதற்காக கடலோர மேலாண்மை திட்டத்தில் விரைவில் ஒப்புதல் பெற்று தேவைப்படும் இடத்தில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நலவாரியத்தில் புதிதாக உறுப்பினரை சேர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 2 நாட்களில் 13 மீனவ கிராமங்களுக்கும் நேரில் வந்து உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை மேற்கொள்வர். ஊரூர் குப்பத்தில் பாதாள சாக்கடை குழாய் சிறிய அளவில் உள்ளது.
இதை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மீன் வலைகளை உலர்த்துவதற்கு மண்டபங்கள் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளிக்காத சூழலில் அங்கு கட்டுமான பணி செய்தால் அது குறித்து யாராவது புகார் அளித்தால் அப்பணி பாதிக்கும். இதனால் அரசு நிதியும் வீணாகும். எனவே, தற்காலிகமாக கூடங்கள், 8 மீனவ கிராமங்களில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறனார். முகாமில் துறை அதிகாரிகள், மீன கிராம பஞ்சாயத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.