அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை

பெரம்பூர்: வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். பூச்சி மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. தம்பதியின் மகள்கள் கலைவாணி (21), மேகலா (15). இதில், 2வது மகள் மேகலா, கொளத்தூர் சீனிவாசா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அரையாண்டு கணக்கு தேர்வு எழுதிவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அவரது அவரது தாய் லட்சுமி, உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது அக்கா கலைவாணி இருந்துள்ளார்.

அப்போது, சமைப்பது தொடர்பாக, கலைவாணிக்கும், மேகலாவுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மேகலா, படுக்கை அறை உள்ளே சென்று, கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் மேகலா வெளியில் வராததால், சந்தேகமடைந்த கலைவாணி, கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மேகலா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

உடனடியாக, சிறுமியை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காவுடன் ஏற்பட்ட சண்டையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* மற்றொரு சம்பவம்
புளியந்தோப்பு சுந்தரபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் ராஜன் (58). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். போதைக்கு அடிமையான ராஜன், மன உளைச்சலில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *