வணிக வளாகத்தில் அடிப்படை வசதி கோரி வியாபாரிகள் சாலை மறியல்
தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 48வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 16 கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. இந்த கடைகளை மொத்தமாக தனிநபர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து, மேல் வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இங்கு கடை நடத்துபவர்கள் கடை வாடகையை முறையாக ஒப்பந்ததாரரிடம் வழங்குவதாகவும், ஆனால், இந்த வாடகையை அவர் மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடைக்காரர்கள் நேரடியாக மாநகராட்சி அலுவலகத்தில் வாடகை செலுத்தி ரசீது பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின் கட்டண பாக்கி காரணமாக மின்வாரிய அதிகாரிகள் கடைகளுக்கான மின் இணைப்பை துண்டித்துள்ளனர். தற்போது கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
இதை கண்டித்து வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி, மின்வாரிய அதிகாரி நேரில் வந்து அடிப்படை வசதிகளை மற்றும் மின் இணைப்பை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததில் பேரில் வியாபாரிகள் மற்றும் பெண் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.