ரூ.1.40 கோடி தங்கம் கடத்தி வந்த ஊழியர் கைது
சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் இருந்து, சென்னை வரும் விமானத்தில் தங்கம், ‘இ – சிகரெட்’ உள்ளிட்ட பொருட்கள், கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலானய்வு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள், விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு துபாயில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானம் ஒன்று வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மேலும், விமானத்தின் ‘கேபின் க்ரூ’ எனும் விமான ஊழியர்களின் தனி அறைக்கு ஊழியர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, ஊழியர் ஒருவர் அணிந்திருந்த ‘பெல்ட்’டைசுற்றி தங்க கட்டிகள் மறைத்து கடத்தியது தெரியவந்தது. அதில் 1.40 கோடி ரூபாய் மதிப்பிலான 1.70 கிலோ தங்கம் இருந்தது. பயணி ஒருவர் ‘கமிஷன்’ தருவதாக கூறியதால் கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்
தாய்லாந்து கஞ்சா
கடத்தியவர் சிக்கினார்
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று சென்னை திரும்பிய நபரை தடுத்து நிறுத்தி உடைமைகளை மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். அதில், வெளிநாட்டு சாக்லெட்டுகளுடன் கூடிய பை ஒன்று இருந்தது.
திறந்து பார்த்ததில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா இருப்பது உறுதியானது. ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்பது போல் பயணி பதில் அளித்துள்ளார். அதன் எடை 7.70 கிலோ இருந்துள்ளது, மதிப்பு, நான்கு கோடி ரூபாய். கடத்தல் பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரது பயண விபரங்கள், கஞ்சா பார்சலை தந்து அனுப்பியது யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.