பூண்டி, புழல் ஏரி உபரி நீரால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்
மணலி, டபுழல், பூண்டி உபரி நீரால், மூன்றாவது நாளாக பர்மா நகர், சடையங்குப்பம் கிராமங்கள் துண்டிக்கப்பட்டதால், பள்ளிக் கல்லுாரி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து, வினாடிக்கு 1,000 கன அடியும், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 8,500 கன அடி உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இந்த ஏரிகளின் உபரி நீர், கடை மடை பகுதியான மணலி – சடையங்குப்பம், பர்மா நகர் அருகே வந்து சங்கமித்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில், கடல் நீர் உள்வாங்காத காரணத்தால், உபரிநீர் கடலில் கலப்பதில் சிக்கல் ஏற்பட்டு, உபரிநீர் கால்வாயில் தேங்க ஆரம்பித்தது.
இதனால், கரை இல்லாதசடையங்குப்பம் – பர்மா நகர் பகுதிகளில், பக்கவாட்டில் வெள்ளநீர் ஏறி, இணைப்பு சாலைகளை மூழ்கடித்தது.
இதனால், சடையங்குப்பம் மேம்பாலம் – குடியிருப்புகளை இணைக்கும் தார் சாலையிலும், பர்மா நகர் உயர்மட்ட பாலம் – குடியிருப்புகள் வரையிலான, இணைப்பு தார் சாலையிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு, அதே நிலையில் நீடிப்பதால், இந்த சாலைகள்மூன்றாவது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால், அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊருக்குள் இருந்து உபரிநீரில் நீந்தியபடி, வெளியே சென்று வரும் நிலைக்கும் அப்பகுதிவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.