விவசாயிகள் சங்கம் கண்டனம் : வேளாண் கடன் உச்ச வரம்பு உயர்வு ஏமாற்று வேலை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை: சொத்து அடமானம் இல்லாது, வேளாண்மைக்கு இதுவரை வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் உச்சவரம்பு ரூ 1.60 லட்சம் என்பதை ரூபாய் 2 லட்சம் ஆக உயர்த்தி வழங்கிட அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இத்தொகையை வரும் ஜனவரி 1 முதல் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த உச்சவரம்பு இதுவரை ரூ 1.60 லட்சம் ஆக இருந்தாலும் இதுவரை இந்த வரம்புபடி விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை.

இதனால் விவசாயி எவர் ஒருவருக்கும் அவர் கொடுக்கும் நிலச்சான்று பரப்பிற்குண்டான தொகையை கடனாகக் கொடுப்பதில்லை. 5 ஏக்கருக்கான சாகுபடிச் சான்று கொடுத்து கடன் கோரினால் அந்த விவசாயிக்கு 2 ஏக்கருக்கு மட்டுமே கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வழங்கப்படுகிறது. கடன் கோரி விண்ணப்பிக்க செய்யும் விவசாயிகள் அனைவருக்குமே அவர்கள் சாகுபடி நிலத்திற்கான அளவில் முழுமையாக கடன் வழங்கப்படாமல் குறைந்த தொகையே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தனக்கு தேவைப்படும் கூடுதல் தொகையை தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலை தற்போது உள்ளது. எனவே சாகுபடி பரப்பிற்கேற்ப கடன் தொகை முழுவதையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு காலத்தில் ஒதுக்கீடுட செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *