சென்னை மாநகராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு மடிக்கணினி, ப்ரொஜெக்டர்: மேயர் பிரியா வழங்கினார்
சென்னை: சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதார துறை சார்பில், நோய்த்தடுப்பு சிகிச்சை வசதிகள் மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய பல்வேறு சேவைகள், பூச்சித்தடுப்பு நடவடிக்கைகள், பல்வேறு தேசிய நலத்திட்டங்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் வீடற்றோர்களுக்கான காப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மேயரின் 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவம் குறித்து பயிற்சிகள் அளிப்பதற்காக மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டி கருவிகள் (லேப்டாப் மற்றும் ப்ரொஜெக்டர்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலங்களிலும் செயல்பட்டு வரும் நகர்ப்புற சமுதாய நல மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நலவாழ்வு மையங்களில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தாய் சேய் நலம், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆய்வக நடைமுறைகள் போன்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. பயிற்சி அளிக்க வேண்டிய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இப்பயிற்சியை மண்டல அளவிலேயே சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலர் மூலம் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறான பயிற்சிகள் அளிக்க ஏதுவாக 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்கும் ₹30 லட்சம் மதிப்பில் மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டது.
இதனை, சுகாதார பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகையில் நேற்று நடத்தது. இதில், மேயர் பிரியா பங்கேற்று லேப்டாப் மற்றும் ப்ரொஜெக்டர்களை வழங்கினார். இதன் மூலம், சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நகர்ப்புற சமுதாய நல மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நலவாழ்வு மையங்களின் மருத்துவ தரம் உயர்த்தப்படுவதுடன், ஏழை, எளிய மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற இயலும். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் (பொதுசுகாதாரம்) சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.