காதலி பேச மறுத்ததால் காதலன் தற்கொலை
பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் 10வது மத்திய குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிரேசி (47), இவரது கணவர் 19 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் லாரன்ஸ். இரண்டாவது மகன் ஆகாஷ் (20), பிளஸ் 2 வரை படித்துவிட்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடையில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கிரேசி சர்ச்சுக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சர்ச்சுக்கு போன கிரேசி, வீட்டிற்கு வந்து, நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஆகாஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆகாஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அவர் ஆகாஷூடன் சரிவர பேசவில்லை என்ற விரத்தியில் தற்கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.