மாடு மூட்டி முதியவர் படுகாயம்
ஏழுகிணறு:சென்னை, சவுக்கார்பேட்டை, நம்மாள்தெருவை சேர்ந்தவர் நரசிம்மா, 83; ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், எட்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னை, சவுக்கார்பேட்டையில் வசித்து வருகிறார். அண்ணா சாலை, ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக் கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று தன் வீட்டருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த வரதன் என்பவருக்கு சொந்தமான மாடு, திடீரென முட்டியதில், நரசிம்மா நிலைகுலைந்து கீழே விழுந்தார். இடுப்புக்கு கீழே பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, அவரது மகன் கிருஷ்ணய்யா கொடுத்த புகாரில், ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதி கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஆளுங்கட்சி ஆதரவோடு வரதன் என்பவர், 25க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்ந்து வருகிறார். இந்த மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு, கொசு தொல்லை அதிகரித்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடமும், போலீசில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
சில மாதங்களுக்கு முன் மாடு முட்டி சிறுவன் படுகாயமடைந்தார். அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், பிரச்னை தொடர்ந்திருக்காது. இதே நிலை தொடர்ந்தால் சாலை மறியலில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.