கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம் ஆயிரக் கணக்கில் திரண்ட பக்தர்கள்
திருவொற்றியூர்:கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய, வரலாறு காணாத வகையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், திருவொற்றியூர் திக்குமுக்காடியது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், மூலவர் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
ஆண்டிற்கு ஒருமுறை, கார்த்திகை பவுர்ணமியையொட்டி, மூன்று நாட்கள் மட்டும் கவசம் அகற்றப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் வைபவம் நடக்கும். அதன்படி, நேற்று முன்தினம் மாலை, ஆதிபுரீஸ்வரர் புற்று வடிவிலான லிங்க திருமேனியில், அணிவிக்கப்பட்டிருந்த நாக கவசம் திறக்கப்பட்டு, மஹா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, புணுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் துவங்கியது. கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை காண, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இரண்டாவது நாளான நேற்று, விடுமுறை தினம் என்பதால், அதிகாலை, 2:00 மணி முதல், சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தோட்டப் பள்ளி வளாகம், எல்லையம்மன் கோவில் சந்திப்பு என, 3 கி.மீ., துாரத்திற்கு மூன்று வரிசைகளாக அணிவகுத்து காத்திருந்தனர்.
வரலாறு காணாத வகையில் கூடிய பல ஆயிரம் பக்தர்கள் குவிந்ததால், திருவொற்றியூர் நெடுஞ்சாலை உட்பட முக்கிய வீதிகள் திணறியது. இதனால், பொது தரிசன வரிசையில், 3 – 5 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டியிருந்தது. கோவில் நிர்வாகம் செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் உள்ளிட்டோர் சுவாமி தரிசதனம் செய்தனர். நேற்றிரவு வரை, லட்சம் பேர் தரிசனம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கவசமின்றி ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டு விடும்.
ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வை, 1999 ம் ஆண்டு முதல் பார்க்கிறேன். ஆனால், 25 ஆண்டுகளில் இதுபோல் ஒரு கூட்டத்தை நான் பார்த்தில்லை. அதிகாலை முதலே, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் ஒருபுறமிருப்பினும், மெட்ரோ ரயில் மற்றொரு முக்கிய காரணம். மேலும், இம்முறை இந்நிகழ்வு சரியாக விளம்பரமாகி உள்ளது. – எ.சசிதரன், 46, டீ கடை, சன்னதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.