காவேரி மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த நீரிழிவு சிகிச்சை மையம் திறப்பு
சென்னை:சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், நீரிழிவு நோய் சார்ந்த பல்வேறு பாதிப்புகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் வகையிலான ஒருங்கிணைந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டில், 10 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, பல்வேறு உறுப்புகளில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை, குடிமைப்பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார்.
இதில், நரம்பியல் இதயவியல், சிறுநீரகவியல், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, பாத பராமரிப்பு, உணவுமுறை மற்றும் உடல் இயக்க நிபுணர்கள் ஒன்றிணைந்து, நவீன சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, காவேரி மருத்துவமனையின் மூத்த நீரிழிவு மருத்துவர் பரணீதரன் கூறுகையில், ”நீரிழிவு நோய், முழு உடலையும் பாதிக்கும் என்பதால், அதை எங்கள் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நவீன மருத்துவக்கருவிகள் மற்றும் நவீன மருத்துவமுறைகளின் வாயிலாக, துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த மருத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.