வாரிய வீடு ஆசை காட்டி மோசடி ரூ.15 லட்சம் ஏமாற்றியவர் கைது
அம்பத்துார்:செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரைச் சேர்ந்தவர் சக்திவேலன், 32. தேனாம்பேட்டை ஐ.டி.எப்.சி., வங்கியில் பணியாற்றி வருகிறார்.
இவரது நண்பர் பரணி என்பவர் வாயிலாக, அம்பத்துார், காமராஜர்புரத்தைச் சேர்ந்த கஜேந்திரன், 37, என்பவர், கடந்த 2021ல் அறிமுகமாகி உள்ளார்.
இவர், அசோக் நகர், புதுாரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பில், 1.63 லட்சம் கொடுத்தால், வீடு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய சக்திவேலன், தன் உறவினர்களுக்கும் சேர்ந்து, 6க்கும் மேற்பட்ட வீடுகள் வேண்டும் எனக்கூறி, கடந்த 2021 நவம்பர் முதல் 2022 ஏப்ரல் வரை, ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அதை பெற்று கொண்ட கஜேந்திரன், குடிசை மாற்று வாரிய ஆணையை சக்திவேலனிடம் கொடுத்துள்ளார். அதை நம்பி, மேலும் ஆறு லட்சம் ரூபாய் சக்திவேலன் கொடுத்துள்ளார். வாரியத்தில் கஜேந்திரன் கொடுத்த ஆணையை சமர்ப்பித்தபோது, அது போலியானது என தெரிந்தது.
இதையடுத்து, அம்பத்துார் காவல் நிலையத்தில், கடந்த ஆக., 7ம் தேதி சக்திவேலன் புகார் அளித்தார். அதன்படி விசாரித்த அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த கஜேந்திரனை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.