ரூ.17.35 கோடியில் சேத்துப்பட்டு பசுமை பூங்கா மேம்படுத்த திட்டம்
சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக, மெரினா கடற்கரை மட்டுமே இருந்தது. படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு செல்ல விரும்புவோர், மாமல்லபுரம் அருகேயுள்ள முட்டுக்காடு சுற்றுலா தலத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதை மாற்றும் வகையில், சேத்துப்பட்டில் உள்ள 16 ஏக்கர் ஏரியை, 48 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்காவாக மாற்றி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, பிப்., மாதம் திறந்து வைத்தார்.
தமிழக மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் பராமரிக்கப்படும் இப்பூங்கா வளாகத்தில், படகு சவாரி மட்டுமின்றி, சிறுவர்கள் விளையாட்டு பகுதி, மீன் கண்காட்சி, ‘3டி’ திரையரங்கம், ஹோட்டல்கள் அமைக்கப்பட்டன. தாவரங்கள் நிறைந்த அழகிய நீர்த்தேக்கமாகவும் காட்சியளித்தது.
இந்நிலையில், 2016 டிசம்பரில் ‘வர்தா’ புயலால், பூங்கா கடுமையாக சேதமடைந்தது. சீரமைப்பிற்கு பின், சுற்றுலாப் பயணியருடன் படகு சவாரி மீண்டும் துவங்கியது.
ஆரம்பத்தில் சுற்றுலா பயணியரை வரவேற்ற இப்பூங்கா, படிப்படியாக களையிழந்து தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இப்பூங்காவை மீட்டெடுக்க வேண்டும் என, பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், களையிழந்த இப்பூங்காவை புத்துயிர் அளிக்கும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக, சி.எம்.டி.ஏ.,வுடன் சேர்ந்து, 17. 35 கோடி ரூபாய் மதிப்பில் முதல் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.
இசை நீரூற்று, நவீன படகு தளம், ஏரி காட்சி உணவகம், பலவித மைதானங்கள், உடற்பயிற்சி கூடம், வாசிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மற்றும் பூங்கா நிர்வாகிகள் கூறியதாவது:
கொரோனா நோய் தொற்றுக்கு பின், பூங்காவில் சுற்றுலா பயணியரின் வருகை வெகுவாக குறைந்தது. நிதி பற்றாக்குறையால் பூங்காவை மேம்படுத்த முடியாமல் இருந்தது.
ஆரம்பத்தில் பூங்காவிற்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தந்தனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக இருந்தது.
நடைபயிற்சிக்கு மட்டும், பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து வருகின்றனர். போதிய நிதியில்லாததால் அவை களையிழந்தது.
தற்போது, வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, 17.35 கோடி ரூபாயில் முதல் திட்ட அறிக்கை கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒப்புதல் கிடைத்தவுடன், 2025 ஜனவரி முதல் வாரத்தில் பணிகள் துவங்கி, டிச., மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –