‘சமூக சோலை’ திட்டத்திற்கு அரசியல்வாதிகள் முட்டுக் கட்டை முதல்வர் , துணை முதல்வர் ஆய்வு செய்தும் இழுபறி
சென்னை:அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலையை ஒட்டி, 10 ஏக்கருக்கு மேல் அரசு இடம் உள்ளது. இதில், ஆக்கிரமிப்பில் இருந்த, 3.50 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது.
அதில், நவ., மாதம், 10 அடி ஆழத்தில் இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. இதில், 1.50 மில்லியன் கன அடி மழைநீர் சேமிக்கப்பட்டது. இந்த குளங்கள் நிரம்பி, சதுப்பு நிலம் செல்லும் வகையில், குழாய் மற்றும் வடிகால் கட்டமைப்பு உள்ளது.
ஆய்வு
அடுத்தகட்டமாக, குளத்தை சுற்றி, 13 கோடி ரூபாயில், ‘சமூக சோலை’ பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த குளத்தை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சமூக சோலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, எல்லை நிர்ணயம் செய்து தர, கலெக்டரிடம் மாநகராட்சி முறையிட்டது. கடந்த மாதம் அளவீடு செய்து, எல்லை நிர்ணயம் செய்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களில் குறியீடு வைக்கப்பட்டது.
ஆனால், வரைபடம் மற்றும் அறிக்கை தயாரிக்கும் பணியை, வருவாய்த் துறை கிடப்பில் போட்டது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல், மாநகராட்சி திணறியது.
கிடப்பில் போட்ட விபரத்தை, மாநகராட்சி கமிஷனர் கலெக்டரிடம் கூறியதைத்தொடர்ந்து, இருதினங்களுக்கு முன் கலெக்டர், தலைமையிடத்து கோட்டாட்சியர், தெற்கு வட்டார துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
வருவாய்த் துறை உயர் அதிகாரிகள், வேளச்சேரி தாலுகா அதிகாரிகளிடம் பணியை முடிக்காதது குறித்து கடிந்து கொண்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வேளச்சேரி ரயில்வே சாலை, ஆறு கல்வெட்டு நீர்வழிப் பாதையை, கடந்த மாதம் முதல்வர், துணை முதல்வர் பார்வையிட்டனர். அதன்பின், வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், இடத்தை மேம்படுத்த வேண்டும் என, உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதன்படி, தலைமை செயலர், கமிஷனர், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சேர்ந்து, அப்பகுதியை சமூக சோலையாக மாற்றவும் முடிவு செய்தனர். பருவமழை முடிந்ததும், பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்குமுன் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அதற்கு அளவீடு செய்து தருவதில், வருவாய்த் துறை அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். மீண்டும் கமிஷனர் தலையிட்டு, கள ஆய்வு செய்தார்.
ஓரிரு நாட்களில், ஆக்கிரமிப்பு தொடர்பான வரைபடம் வரும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆக்கிரமிப்பு
வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் விளையாட்டு மைதானம், நீர்வழித்தடத்தை ஒட்டி உள்ள பெரிய கட்டடங்கள், 15க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் உள்ளிட்ட கட்டடங்கள் மற்றும் காலி இடங்களில் ஆக்கிரமிப்பு குறியீடு செய்துள்ளோம்.
அதை அறிக்கையாக தயாரித்து விட்டோம். எல்லை வரைபடம் தயாரிக்கும்போது, அப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதிகள், சில மக்கள் பிரதிநிதிகளின் அழுத்தம் காரணமாக, திட்டத்தை கிடப்பில் வைத்தோம்.
அறிக்கை தயாரிக்கும் விபரத்தை, சில ஊழியர்கள் வெளியில் கசிய விட்டதால், கிடப்பில் போட வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது.
மீண்டும் மாநகராட்சி கமிஷனர், தலைமை செயலகத்தில் இருந்து ஆக்கிரமிப்பு அறிக்கை, வரைபடம் கேட்கப்பட்டுள்ளது.
முழு விபரங்களை, வரைபடத்துடன் ஓரிரு நாட்களில், கலெக்டரிடம் வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.