இருளில் தவிக்கும் கல்லுாரி சாலை தெரு விளக்கு கம்பங்கள் அகற்றம்

சென்னை:பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரி சாலை, 100 அடி அகலம் உடையது. 2016ல் உருவாக்கப்பட்ட இந்த சாலை, ஊராட்சி வசம் இருந்து, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறை வசம் சென்றது.

அரசு கல்லுாரி, ஐ.டி.ஐ., மேல்நிலைப் பள்ளி, சமூக கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், பணிமனை, அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. தற்போது, 200 படுக்கை வசதி உடைய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

சாலை அமைக்கும்போது, தெருவிளக்கு போடப்பட்டது. ஊராட்சி வசம் ஒப்படைத்தபின், நிதியை காரணம் காட்டி பராமரிக்கவில்லை.

நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்ததும், சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால், தெரு விளக்குகளை சீரமைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் அங்கிருந்த தெருவிளக்கு கம்பங்கள் அகற்றப்பட்டன. இதனால், 100 அடி சாலை இருளில் மூழ்கி உள்ளது.

சாலை கல்லுாரியுடன் முடிவதால், இரவு நேரத்தில், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. இந்த சாலை வழியாக குடியிருப்புகளுக்கு செல்வோர் அச்சப்படுகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்களும் அடிக்கடி உடைக்கப்படுகின்றன. முக்கிய சாலையாக உருவாகி வருவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாலை எங்கள் வசம் இருந்தாலும், தெரு விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் தான் அமைத்து, பராமரிக்க வேண்டும். இந்த பகுதியில் வரி வருவாய் இல்லாததால், அவர்கள் கண்டுகொள்வதில்லை. மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோ

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘நிதி பற்றாக்குறையால், தெருவிளக்குகளை பராமரிக்க முடியவில்லை. இந்த சாலை அமைந்துள்ள பகுதி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையில் உள்ளதால், புதிதாக கம்பம் நடவில்லை. மின்வாரியத்திடம் தெருவிளக்கு கம்பம் அமைக்க கேட்டுள்ளோம்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *