மடிப்பாக்கத்தில் அட்டகாசம் நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு
மடிப்பாக்கம் பகுதியில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் கும்பலின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியாக மடிப்பாக்கம் விளங்குகிறது.
அங்கு, நடுத்தர மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். குடியிருப்பின் திறந்தவெளிப் பகுதியில், தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவது வழக்கம்.
பலர், சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதும் உண்டு. இந்நிலையில், சமீப காலமாக இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் திருடு போவதாக புகார் எழுந்து உள்ளது. பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மடிப்பாக்கத்தில், இருசக்கர வாகனங்களை குடியிருப்பின் திறந்தவெளி, சாலையில் விடுவது வழக்கம். சில நாட்களாக, நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடுவது அதிகரித்து உள்ளது.
குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில், அதிகாலை 2:00 மணி முதல் 3:30 மணி வரை, அடையாளம் தெரியாத இளைஞர்களால் பெட்ரோல் திருடப்படுவது தெரிந்தது.
பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள், குடிநீர் மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். இவர்கள் செயின் பறிப்பிலும் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் குடியிருப்பு பகுதிகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். திருட்டு கும்பலை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
— நமது நிருபர் –