மெரினா லூப் சாலை ரூ.17 லட்சம் செலவில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சீரமைப்பு: டெண்டர் கோரியது மாநகராட்சி
சென்னை: பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன், மெரினா லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.17 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியுள்ளது. மெரினா கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் வரை கடற்கரையை ஒட்டி லூப் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை ஏராளமான மீன் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த கடைகள் மற்றும் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால், லூப் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. மேலும், அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு மீன் கடைகளை மாநகராட்சி அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து, மெரினா காவல் நிலையம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி கடைகளை ஒழுங்குபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டு விரைவில் மீனவர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்தார்.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும், மீனவர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ரூ.14.93 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி திறந்து வைத்தார். 2 ஏக்கரில் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட நவீன மீன் அங்காடியில் 360 கடைகளும், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தும் வகையில் 84 இருசக்கர வாகனங்கள், 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 40 கே.எல்.டி. கொள்ளளவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மீன் வெட்ட தனி இடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீன் அங்காடியின் வெளியில் லூப் சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன் அங்காடி வெளியே லூப் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நவீன மீன் அங்காடியின் உள்ளேயும், வெளியேயும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்வித வாகன கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மாநகராட்சி மற்றும் மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் இணைந்து லூப் சாலையில் மீன் விற்பனை செய்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, மெரினா லூப் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் நொச்சிக் குப்பம், நொச்சி நகர் மற்றும் டுமில் குப்பம் பகுதிகளை சார்ந்த மீன் விற்பனை செய்பவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் மீன் விற்பனை செய்பவர்களின் பெரும்பாலானவர்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளை சேர்ந்த ஒரு சிலர் லூப் சாலையில் மீன்களை விற்பனை செய்து வந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நவீன மீன் அங்காடியில் மட்டுமே மீன்களை விற்பனை செய்திட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் மீன்கள் வாங்கிட வருகைதரும் பொதுமக்களும் லூப் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி வளாகத்திற்குள் மட்டுமே மீன்களை வாங்கிட வேண்டும்.
மீன் விற்பனையாளர்களும், பொதுமக்களும் வாகனங்களை கட்டணமின்றி நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்திட வேண்டும், என மாநகராட்சி உத்தரவிட் டுள்ளது. இதனை கண்காணிக்க சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல் துறைகளின் அலுவலர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைத்து, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன், மெரினா லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ரூ.17 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியுள்ளது. இதன்மூலம் லூப் சாலையை சுற்றுலா தளமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.