தாம்பரம் – கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, தொழில் என பல்வேறு விஷயங்களுக்காக சென்னையில் தங்கி உள்ளனர். இவர்கள், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. சமீபத்தில்கூட, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

அதாவது, தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை, 6 மணிக்கு கிளம்பும் இந்த ரயிலானது, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பன்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக கோவையை அடைகிறது. பிறகு, இதே வழித்தடத்தில், கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

அந்தவகையில், தாம்பரத்தில் இருந்து, கோவைக்கு சிறப்பு ரயில் அக்டோபர் 11ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரையும், கோவையில் இருந்து தாம்பரத்துக்கு அக்டோபர் 13ம் தேதி முதல், டிசம்பர் 1ம் தேதி வரையும் என மொத்தம் 8 முறை இயக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்வே சேவையை மீண்டும் நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் – கோவை வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான வரவேற்பு தொடர்ந்து கிடைத்துவரும் நிலையில், பயணிகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால், 2ம் வகுப்பு பொது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயிலில், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு அன்ரிசர்வ் பெட்டிகள், 2 எஸ்.எல்.ஆர்., டி பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *