அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு : திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது

தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா, ஏழுகிணறு பகுதியில் நடந்தது. இளைஞர் அணி பகுதி துணை அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இளம் பேச்சாளர்கள் செங்கல்பட்டு சிலம்பரசன், காஞ்சிபுரம் பேரரசன் உள்ளிட்டர் கலந்து கொண்டு பேசினர், விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசியதாவது:

தமிழ்நாட்டில் 89 சதவீதம் பேர் திராவிட மாடல் ஆட்சியை விரும்புகின்றனர். அனைவருக்குமான ஆட்சி தான் திராவிட மடல் ஆட்சி. ஒரு கட்சி என்றால் கொள்கை இருக்க வேண்டும் அந்த கொள்கையின் அடிப்படையில் தான் நாம் செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகளை மதிக்கின்ற கட்சி திமுக தான். மகளிருக்கு, மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நாம் கேட்க முடியும்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கன மழையின் போது, பல்வேறு இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். திமுக ஆட்சியில் தற்போது, அனைவருக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது, சீமான் கட்சி விரைவில் காணாமல் போய்விடும். ஒன்றிய அரசு நம்மிடம் இருந்து 1 ரூபாய் ஜிஎஸ்டி பெற்றுக் கொண்டு 29 பைசா மட்டும்தான் திருப்பி கொடுக்கிறது. இது மிகவும் மோசமான ஒன்று.

தமிழ்நாட்டில் திராவிட மாடல்ஆட்சி இருந்தால் தான் நமக்கு பலன்கள் கிடைக்கும். அம்மா உணவகத்தை சீரமைக்க முதல்வர் 21 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும். இன்று 48 சதவீத பெண்கள் வேலை செய்கிறார்கள். மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, துறைமுக தொகுதி பொறுப்பாளர் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர் பரிமளம், விஜயகுமார், ஜெகதீஸ், சம்பத்குமார், சத்யநாராயணன், புகழேந்தி, அஸ்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *