பெரு நகர் 3வது முழுமை திட்டத்தில் உள் கட்டமைப்புக்கு அறிக்கை தயாரிப்பு
சென்னை, சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம் 2026ல் முடிவடையும் நிலையில், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள், 2021ல் துவங்கின.
இதில் முதற்கட்டமாக, தனியார் கலந்தாலோசனை நிறுவனங்கள் வாயிலாக, தொலைநோக்கு அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, பகுதி வாரியாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான கருத்துகள் பெறப்பட்டன. இந்த கருத்துகள் அடிப்படையில், புதிய திட்டங்கள் முழுமை திட்டத்தில் சேர்க்கப்படும் என கூறப்பட்டது.
இதற்காக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், பல்வேறு துறையினருடன் கலந்து பேசி ஒவ்வொரு பகுதிக்கும், அடுத்த 20 ஆண்டுகளில் தேவைப்படும் திட்டங்களை இறுதி செய்து வருகின்றனர்.
தொலை நோக்கு ஆவண அடிப்படையில் முழுமை திட்ட பிரதான ஆவணம் தயாரிக்கப்படும்.
இதில், சென்னை பெருநகரின் மொத்த பரப்பளவான, 1,189 சதுர கி.மீ., பரப்பளவில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் என்ன, புதிதாக தேவைப்படும் வசதிகள் என்ன என்பது தொடர்பாக, ஒரு துணை அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகரில், திட கழிவு மேலாண்மை, மின்சாரம், தொலை தொடர்பு சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளின் தற்போதைய நிலை, எதிர்கால தேவை குறித்த முழுமையான விபரங்கள் இணைக்கப்பட உள்ளன.
இந்த அறிக்கை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, வல்லுனர் தேர்வு நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் இதற்கான பணிகள் துவங்கிவிடும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.