ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ உத்தரவு : நோயாளியின் உறவினர்களை அலைய விடக் கூடாது
சென்னை,எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, கிண்டி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணியர், நேயாளிகள், ரத்த பரிசோதனை உள்ளிட்டவற்றுக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பட்டு, மணிக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இதையடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்துள்ள பதில்:
ரத்த தட்டு அணுக்கள், தைராய்டு, டெங்கு, கொரோனா உள்ளிட்ட ரத்த பரிசோதனைகளுக்கு, அதன் மாதிரிகளை உறவினர்களை கொடுத்து அனுப்பும் முறை தவிர்க்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில், ரத்த மாதிரிகளை, அந்தந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஆய்வக பிரதிநிதிகளே கொண்டுவர வேண்டும் என, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
எழும்பூர் அரசு மகப்பேறு, திருவல்லிக்கோணி கஸ்துாரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், பிரத்யேக கார்டியோ மகப்பேறியல் பிரிவு செயல்பட்டு வருகிறது.
அதேபோல், நெஞ்சுவலி நோயாளிகளுக்கு, பிரத்யேக மார்பு வலி கிளினிக், நரம்பியல், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிப்புடன் வரும் கர்ப்பிணியர் வரிசையில் காத்திருக்காமல், தனி வழியில் ரத்த பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டு, விரைவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.