குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்
குன்றத்துார், படப்பை அருகே ஆதனுார், ஒரத்துார், சோமங்கலம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து துவங்கும் அடையாறு கிளை கால்வாய், வரதராஜபுரத்தில் ஒன்றாக இணைந்து, சென்னை பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.
சோமங்கலம் ஏரி, மணிமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரால், அடையாறு கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், வரதராஜபுரத்தில் தாழ்வான பகுதிகளான பி.டி.சி.,நகர், பரத்வாஜ் நகர், அஷ்டலட்சுமி நகர், வைதேகி நகர், விஜய் நகர் உள்ளிட்ட பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.
விஜய் நகரில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய ஒரு குடும்பத்தினரை, தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று, நேற்று மீட்டனர். குடியிருப்பை சூழ்ந்த வெள்ள நீரால் அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இருளர்கள் மீட்பு
பூந்தமல்லி ஒன்றியம் பாரிவாக்கம் ஏரிக்கரையோரம், இருளர் பழங்குடியினர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் பெய்த கனமழையால், அவர்களின் குடிசைக்குள் தண்ணீர் புகுந்தது.
தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகு வாயிலாக பழங்குடி மக்களை மீட்டு, அதே பகுதி அரசு நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.