ரூ.1.38 லட்சம் கிரெடிட் கார்டில் ஓ.டி.பி., இல்லாமலே ‘ஆட்டை’
சென்னை,ரகசிய குறியீடு எண் இல்லாமலே, ஓட்டுனரின் கிரெடிட் கார்டில் இருந்து, 1.38 லட்சம் ரூபாய் ஆட்டை போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னிதி முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 42; ஓட்டுநர். கடந்த, 10 ஆண்டுகளாக ‘கிரெடிட் கார்டு’ பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 7ம் தேதி, ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கம் அருகே உள்ள ‘இந்தியன் ஆயில்’ பெட்ரோல் ‘பங்க்’கில் இருசக்கர வாகனத்திற்கு, 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதற்கான பணத்தை, அவரது கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தினார்.
பின் வீட்டிற்கு சென்று மொபைல் போனில் வந்த குறுஞ்செய்திகளை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதில், இவரது கிரெடிட் கார்டில் இருந்து பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் 13 முறை, 10,000 ரூபாய், இரண்டு முறை 4,000 என, 1.38 லட்சம் ரூபாய் பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து வங்கியை தொடர்பு கொண்டு சீனிவாசன் பேசியபோது, காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.