கோவில்களில் பக்தர்கள் தரிசன அனுபவம் தெரிவிக்க மின்னணு இயந்திரம்
சென்னை, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 48 முதுநிலைக் கோவில்களில், பக்தர்கள், தங்களது தரிசன அனுபவம் குறித்த மதிப்பீட்டையும், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில், மின்னணு இயந்திரம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக சென்னை வடபழனி, மயிலாப்பூர், திருவொற்றியூர், பழனி, திருத்தணி, ஸ்ரீரங்கம், மருதமலை ஆகிய கோவில்களில், மின்னணு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மின்னணு ஆலோசனை இயந்திரத்தின் செயல்பாட்டை, வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு, நேற்று இயக்கி வைத்தார். பின், நன்கொடையாளர்களை கவுரவித்தார்.
முன்னதாக, வடபழனி முருகன் கோவிலில், உபயதாரர்களான கணேஷ் பிரசாத், ரோஹித் ரமேஷ் ஆகியோரால் வழங்கப்பட்ட, 34 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட வெள்ளிக்கதவுகள், மூலஸ்தானத்தில் 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டி வசதியையும், அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.