தரைப் பாலத்தில் வெள்ளம்: காருடன் சிக்கியவர் மீட்பு
சென்னை, மதுரவாயல், அடையாளம்பட்டு பகுதியில், கூவம் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிகளிலிருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால், தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், கவனக்குறைவாக யாரும் சென்று சிக்கிக் கொள்வதை தவிர்க்க, தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்லாத வகையில், போலீசார் கயிறு கட்டி வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, தடையை மீறி காரை பாலத்தில் இயக்கி சென்றவர், வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.
சம்பவம் அறிந்துவந்த போலீசார், ஜே.சி.பி., வாகனத்தில் சென்று கார் கண்ணாடியை உடைத்து, காருக்குள் சிக்கியிருந்த முகப்பேரைச் சேர்ந்த சுனில் வர்க்கீஸ், 54, என்பவரை மீட்டனர். பின், வெள்ளத்தில் சிக்கிய காரையும் மீட்டனர்.