ஹாக்கியில் நீலகிரி வெட்ரன்ஸ் அணி வெற்றி
சென்னை,எஸ்.எம்., நகர் ஹாக்கி சங்கம் சார்பில், ‘மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் – 3.0’ போட்டிகள், போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் கடந்த வாரம் துவங்கியது. இதில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் வார இறுதி நாட்களில் நடக்கின்றன.
அந்தவகையில், நேற்று மாலை நடந்த போட்டியில், மவுண்ட் ஸ்டார்ஸ் மற்றும் நீலகிரி வெட்ரன்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில், முதல் பாதியில் நீலகிரி வெட்ரன்ஸ் அணி, 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 47வது நிமிடத்தில், மவுண்ட் ஸ்டார்ஸ் அணி வீரர் தினகரன், ‘பீல்டு கோல்’ அடித்து, 1 – 1 என்ற கணக்கில் ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.
தொடர்ந்து நடந்த ‘டை பிரேக்கர்’ ஆட்டத்தில், இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. முடிவில், 8 – 7 என்ற கோல் கணக்கில் நீலகிரி வெட்ரன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.