ஐகோர்ட் : சி. எம். டி. ஏ., உறுப்பினர் செயலருக்கு ரூ .25,000 அபராதம்

சென்னை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில், உதவி பொறியாளராக, 2012 டிசம்பரில் செல்வநாயகம் என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்தாண்டில், உதவி நிர்வாகப் பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். கூடுதலாக சட்ட அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலையில் திடீரென இவரை ‘சஸ்பெண்ட்’ செய்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செல்வநாயகம் தாக்கல் செய்த மனுவில், ‘இந்த உத்தரவை பிறப்பிக்க, உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் இல்லை. சி.எம்.டி.ஏ.,வின் துணைத் தலைவர் தான் உத்தரவிட முடியும்’ என கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதித்தது. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றி, உறுப்பினர் செயலர் உத்தரவு பிறப்பித்தார்.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.குழந்தைவேல் ஆஜராகி, ”வழக்கு நிலுவையில் இருக்கும் போது, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது, நீதிமன்ற அவமதிப்பாகும்,” என்றார்.

இருதரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவு:

துணைத் தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, சஸ்பெண்ட் உத்தரவை உறுப்பினர் செயலர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை பிறப்பிக்க, அவருக்கு அதிகாரம் இல்லை. விதிகளின்படி, துணைத் தலைவருக்கு தான் தகுதி உள்ளது; உறுப்பினர் செயலர், அந்த உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது.

இந்த வழக்கில் ஆரம்ப முகாந்திரம் இருப்பதை கருதி, சஸ்பெண்ட் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கவும், அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கவும், உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் இல்லை.

நீதிமன்ற நடவடிக்கையில், அவர் குறுக்கீடு செய்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு, நீதிமன்றத்தை அவர் அணுகியிருக்க வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக எடுக்கலாம் என்றாலும், அவரது பதவியை கருதி எடுக்கவில்லை. ஆனால், வழக்கு செலவுத் தொகையாக, 25,000 ரூபாய் விதிக்கப்படுகிறது.

அவரது சம்பளத்தில் இருந்து, அபராதத்தை செலுத்த வேண்டும். சஸ்பெண்ட் உத்தரவு, அதை ரத்து செய்து இடமாற்றம் செய்த உத்தரவு என, இரண்டும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *