நீர் திறப்பு அதிகரிப்பால் வடியாத வெள்ளம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளுக்கு, நீர்வரத்து உள்ளதால், வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் வடிவதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.
விட்டு விட்டு மழை பெய்தபோதும், அதிகப்படியான மழை பெய்ததால், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, இரட்டை ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால், செம்பரம்பாக்கத்தில் நேற்று முன்தினம் 4,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், நேமம் ஏரி உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இதனால், சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, செம்பரம்பாக்கம் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால், அடையாறு கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதை ஒட்டிய பகுதிகளில் வசிப்போர், பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24ல் 22.70 அடியை எட்டியுள்ளது. கொள்ளளவு 3.64ல் 3.30 டி.எம்.சி.,யும், நீர் வரத்து வினாடிக்கு 2,550 கன அடியாகவும் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் ஒரு பகுதி, ஸ்ரீபெரும்புதுார் – குன்றத்துார் சாலையில், குன்றத்துார் முருகன் கோவில் அருகே வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலையை கடந்து சென்று, அடையாறு கால்வாயில் சேர்கிறது.
இந்த சாலையில் 3 அடிக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால், சர்வீஸ் சாலை நேற்று மூடப்பட்டது.
இந்த வழியே குன்றத்துார், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், வெளிவட்ட சாலை மேம்பாலம் வழியாக, மாற்று வழியில் குன்றத்துார், திருமுடிவாக்கம் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
அதேபோல், பூந்தமல்லி ஒன்றியம், பாரிவாக்கம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர், பூந்தமல்லியில் இருந்து பாரிவாக்கம் செல்லும் சாலையில் வழிந்தோடுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சென்னையின் பிரதானமானதாக கருதப்படும் ஏரிகளுக்கு தொடர் நீர்வரத்து உள்ள நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏரிகளில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட நீர் வடியாமல், பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் கனமழை பெய்தால், ஏரிகளில் நீர் திறப்பு அதிகரித்து மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.