ஆக்கிரமிப்புகளை அகற்ற பொழிச்சலுாரில் எதிர்ப்பு
பொழிச்சலுார் ஊராட்சி, அன்னை இந்திரா காந்தி பிரதான சாலையில், பாரதி நகர் உள்ளது. இப்பகுதியில், அரசு இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி வருவாய்த் துறையினர் பாரதி நகரில், ஏரி புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள, 64 வீடுகளை கணக்கிட்டு, நோட்டீஸ் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, வீடுகளை அகற்றக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டு வீடுகளின் சுற்றுச்சுவர், மூன்று குடிசைகளை அகற்றிவிட்டு, வருவாய் துறையினர் அங்கிருந்து சென்றனர்.