ஒருநாள் மழைக்கே குளமான அரும்பாக்கம்
அரும்பாக்கம், ரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில், ஒருநாள் மழைக்கே குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
அண்ணா நகர் மண்டலத்தில், 94 – 108 வரையிலான 15 வார்டுகள் உள்ளன. அவற்றில், அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்கள் அடங்கும்.
இப்பகுதியில், ஒவ்வொரு மழையின் போதும் மற்ற இடங்களை விட, அரும்பாக்கம் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படைகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த ஒரு நாள் மழைக்கே, அரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் குளம் போல மழைநீர் தேங்கியது.
குறிப்பாக, எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை, விநாயகபுரம் பிரதான சாலை, பசும்பொன் தெரு, சிட்கோ சாலை மற்றும் முதல் தெரு, இந்திரா காந்தி மூன்றாவது தெரு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி, பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் தத்தளித்து சென்றன.