வீடுகள் அகற்றம் கிராம சபையில் கொந்தளிப்பு
திருவொற்றியூர் மண்டலம், 1 வது வார்டு கிராம சபை கூட்டம், நேற்று காலை, எண்ணுார் வியாபாரி சங்க திருமண மாளிகையில், தி.மு.க., கவுன்சிலர் சிவகுமார் தலைமையில் நடந்தது.
கிராம சபை கூட்டத் தில், பங்கேற்ற ஊர் நிர்வாகிகள் பேசியதாவது:
சத்தியவாணி முத்துநகர், காமராஜர் நகர் போன்ற பகுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கம் உள்ளது. உலகநாதபுரத்தில், நிறுவனத்தில் நச்சுபுகை அதிகம் உள்ளது. சுத்தமில்லாத உப்பு நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அதுவும், ஐந்து நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது. தாமரை குளத்தை சுற்றிய வீடுகளில், 60 ஆண்டுகாலம் வசிக்கும் நிலையில், 1989ல், 23 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், வழக்கின் திசை மாற்றி, ஆக்கிரமிப்பு என, குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடமும், இழப்பீடும் வழங்க வேண்டும். வருவாய் – சர்வேயில் குளறுபடி உள்ளதால், முறையாக கணக்கெடுக்க வேண்டும். எண்ணுார் – பழவேற்காடு பேருந்து வசதி வேண்டும்.
கவுன்சிலர் சிவகுமார் பதிலளித்து பேசுகையில், ”திட்டங்கள் செயல்படுத்துவதில் கிராமங்களின் முன்னெடுப்பு முக்கியம். சில இடங்களில், சிலரின் எதிர்ப்பால், 5 கி.மீ., மழைநீர் வடிகால் பணிகள் தடைபட்டு உள்ளது.
தாமரை குளத்தை சுற்றிய வீடுகள் ஆக்கிரமிப்பு என அகற்றப்படுவதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்,” என்றனர்.