திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரருக்கு நாளை தைலாபிஷேகம் ஆண்டில் ஒரு முறை நிகழும் விழா
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது.
இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுதும், தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆண்டுக்கொரு முறை, கார்த்திகை தீபத்தையொட்டி, மூன்று நாட்கள் மட்டும், ஆதிபுரீஸ்வரர் லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் கவசம் அகற்றப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடக்கும்.
அதன்படி இந்தாண்டு, நாளை மாலை, 6:00 – 7:00 மணிக்குள்ளாக தங்க முலாம் பூசிய நாக கவசம் அகற்றப்பட்டு, தைலாபிஷேக வைபவம் துவங்கும்.
தொடர்ந்து, 15, 16 ஆகிய தேதிகளில், காலை 6:00 – இரவு 8:30 மணி வரை, ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும். நிறைவாக, 16ம் தேதி இரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.
ஆண்டுக்கொரு முறை நிகழும் அதிசய வைபவம் என்பதால், சென்னை மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மழை எச்சரிக்கை காரணமாக, பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது, மழையில் நனையாதபடி, கோவில் வெளியே மற்றும் வளாகத்தினுள் கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.