காவல் நிலையத்தில் புகுந்த மழை வெள்ளம்
அமைந்தகரை, அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ சாலையில், கூவம் கரையோரம் அமைந்தகரை காவல் நிலையம் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இடத்தில், பழைய ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரை கட்டடத்தில், வாடகையில் இயங்கி வருகிறது.
ஒரே கட்டடம் என்பதால், முன்பக்கம் சட்டம் — ஒழுங்கு போலீசும், பின் பக்கம் குற்ற தடுப்பு காவல் நிலையமும் இயங்கி வருகின்றன.
சாலை மட்டத்தைவிட தாழ்வாக கட்டடம் அமைந்துள்ளதால், ஒவ்வொரு பருவமழையின் போதும், காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்து, போலீசார் அவதிப்படுகின்றனர்.
உள்ளே தேங்கும் தண்ணீர், மோட்டார் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இதனால், கோப்புகளை பாதுகாப்பதில் போலீசார் கடும் சிரமங்களை அனுபவிக்கின்றனர். நேற்று பெய்த மழைக்கும், இங்கு பாதிப்பு ஏற்பட்டது.