எஸ். ஆர். எம். , பல்கலையில் தேசிய அறிவியல் மாநாடு
சென்னை, இந்திய தேசிய அறிவியல் கழகத்தின், 90ம் ஆண்டு சர்வதேச மாநாடு, சென்னையை அடுத்துள்ள காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்தது.
தலைமை வகித்த பல்கலை இணை வேந்தர் சத்தியநாராயணன் பேசுகையில், ”நம் நாட்டின் வளர்ச்சிக்கு, அறிவியல் தொழில்நுட்ப கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இந்த கல்வியில் பங்களிக்கும் துவக்கநிலை நிறுவனங்களை வளர்க்க வேண்டியது முக்கியம்.
தற்போது, கணிதம், விண்வெளி, உலோகவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் நம் நாடு சிறந்து விளங்குகிறது,” என்றார்.
இந்திய தேசிய அறிவியல் கழக அதிபரான அஷுதோஷ் ஷர்மா, அறிவியல் தொழில்நுட்பத்தில் உள்ள குறைகள், புதிய சிந்தனைகள் மற்றும் சவால்கள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக பேசினார்.
மாநாட்டில், பிரபல விஞ்ஞானிகள், தொழில்துறை வல்லுனர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.