ரூ.23 லட்சத்தில் ‘விவேகானந்தா கல்லுாரிக்கு ‘ஸ்மார்ட் ரூம்’
சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் ராமகிருஷ்ணா மிஷனுக்கு சொந்தமான ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரி உள்ளது. கடந்த, 78 ஆண்டுகள் பழமையான கல்லுாரியில், இளங்கலை பட்ட படிப்பில், 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
விவேகானந்தா கல்லுாரியின் கணிதத் துறைக்கு, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், 23 லட்சம் ரூபாய் செலவில், 30 அதிநவீன கணினிகள் மற்றும், ‘ஸ்மார்ட் போர்டு புரஜெக்டர்’ உடன், 60 இருக்கைகளுடன் கூடிய ஸ்மார்ட் ரூம் வசதி அமைக்கப்பட்டு உள்ளது.
இதை, யுனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டல தலைமை அதிகாரி சத்யபன் பெஹெரா துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, விவேகானந்தா கல்லுாரி செயலர் சுவாமி தியானகம்யானந்தா கூறியதாவது:
கல்லுாரியில் ஸ்மார்ட் ரூம் வசதி ஏற்படுத்திக் கொடுத்த வங்கி நிர்வாகத்திற்கு நன்றி. கல்லுாரி மாணவர் சமூகத்திற்கு மேம்பட்ட கற்றல் சூழல் மற்றும் வசதிகளை வழங்குவதன் வாயிலாக, அவர்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு, கல்லுாரியின் முன்னாள் மாணவர்களை, கல்லுாரியின் இணையதளத்தில் பதிவு செய்து, கல்லுாரியின் வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்